கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி கலெக்டர் ஒட்டி தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியை கலெக்டர் ஷ்ரவன் குமார் ஒட்டி தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 11 விதமாக அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுவரில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஒட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரேஷன் கடைகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, மாரீஸ்வரன், கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.