கள்ளக்குறிச்சியில்குப்பை கொட்டும் இடமாக மாறிய கோமுகி ஆற்றங்கரை


கள்ளக்குறிச்சியில்குப்பை கொட்டும் இடமாக மாறிய கோமுகி ஆற்றங்கரை
x
தினத்தந்தி 30 Dec 2022 12:30 AM IST (Updated: 30 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் குப்பை கொட்டும் இடமாக கோமுகி ஆற்றங்கரை மாறி உள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள கடைக்காரர்கள், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை வந்து கொட்டுகின்றனர். மேலும் அழுகிய காய்கறிகள், உணவு பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்களும் அங்கு தான் கொட்டப்படுகின்றன. மேலும் சிலர் கழிவு பொருட்களை பாலத்தில் இருந்து ஆற்றில் கொட்டுகின்றனர். சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அங்கு குவிந்து கிடக்கிறது. இதை துப்புரவு பணியாளர்கள் சரிவர அப்புறப்படுத்தவில்லை.

கோரிக்கை

இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்தபடி ஓட்டிச்செல்கின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதால் அவதியடைகின்றனர். எனவே கோமுகி ஆற்றங்கரையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து கள்ளக்குறிச்சி நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி கூறுகையில், கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நுகர்வோர் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது என்ன கோமுகி ஆற்றங்கரையா? அல்லது குப்பை கொட்டும் இடமா? என தெரியவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அந்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றார்.

குளிக்க முடியாத சூழல்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டியன் கூறுகையில், கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகில் கள்ளக்குறிச்சி நகர மக்கள் மற்றும் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள கடைக்காரர்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற கழிவு பொருட்கள் மற்றும் காய்கறி கழிவுகளை கொட்டி வருகின்றனர். சிலர் ஆற்றிலும் அந்த கழிவு பொருட்களை கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதேபோல் ஆடு, மாடு மற்றும் பறவைகள் தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story