கல்லணையில், 1,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி
கல்லணையில், 1,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி
கரிகால் சோழனின் பெருமையை போற்றும் வகையில் கல்லணையில் 1,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
பழமையான அணை
உலகில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழமையான அணைகளுள் ஒன்று கல்லணை. நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த சோழ சாம்ராஜ்யத்தில் கரிகால் சோழன் என்ற மன்னரால் முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் கிராமத்தில் இந்த கல்லணை அமைந்து உள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி மேட்டூர் அணையை கடந்து திருச்சி வழியாக கரைபுரண்டோடி வரும் காவிரி முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என 2 ஆறுகளாக பிரிகிறது.
விவசாய பாசனத்துக்கு ஆதாரம்
முக்கொம்பில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேலணையை கடந்து வரும் காவிரி ஆறு தஞ்சை மாவட்ட எல்லையையொட்டி பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் கல்லணையை வந்தடைகிறது. இங்கிருந்து காவிரி ஆற்று தண்ணீர் கொள்ளிடம், வெண்ணாறு, புது ஆறு(கல்லணைக்கால்வாய்) திறந்து விடப்படுகிறது.
காவிரியின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதத்திலும், தண்ணீரை பிற ஆறுகளுக்கு பகிர்ந்தளிக்கும் விதத்திலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு ஆதாரமாகவும் அமைந்துள்ளது கல்லணை.
நாட்டியாஞ்சலி
கல்லணையின் நீளம் 1,080 அடி. அகலம் 66 அடி. உயரம் 18 அடியாகும். சோழ தேசத்தின் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக திகழும் கல்லணை மற்றும் அதை கட்டி எழுப்பிய கரிகால் சோழனின் பெருமையை போற்றும் வகையில் கல்லணையில் நேற்று பசுமையும், பாரதமும் என்ற தலைப்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
தமிழக கலை பண்பாட்டு துறை, சுற்றுலாத்துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது
1,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் நாட்டிய பெண் கலைஞர்கள் 1,000 பேர் பச்சை ஆடை அணிந்து கல்லணையில் அமைந்துள்ள காவிரி, கொள்ளிடம் ஆற்றின் பாலங்கள் மீது ஒரு மணி நேரம் பரத நாட்டியமாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சை), அன்பழகன்(திருச்சி), ஆடல் வல்லான் இசை நாட்டியாலயா நிர்வாகி ஆடல்வல்லான், காஞ்சனாதேவி வஜ்ரவேல், காவேரி கலை அரண் அறக்கட்டளை நிர்வாகி வஜ்ரவேல், சிவசக்தி அகாடமி நிர்வாகி மீனா சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக சாதனை முயற்சியாக இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்ததாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சூரிய உதய நேரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.