காயல்பட்டினம் பகுதியில்5 வீடுகளில் திருடப்பட்ட 34 ஆடுகள் மீட்பு
காயல்பட்டினம் பகுதியில் 5 வீடுகளில் திருடப்பட்ட 34 ஆடுகள் மீட்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் பகுதியிலுள்ள 5 வீடுகளில் திருடப்பட்ட 34ஆடுகளை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆடுகள் திருட்டு
காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வைரவன் மனைவி பத்மாவதி (வயது 64). நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 13 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், காயல்பட்டினம் ஓடக்கரை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சின்னதுரை (45) என்பவரது வீட்டில் 34 ஆடுகள் மறைத்து கட்டி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
34 வீடுகள் மீட்பு
அந்த வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பத்மாவதியின் 7 ஆடுகள் மீட்கப்பட்டது. மேலும் அங்கிருந்த ஆடுகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காயல்பட்டினம் காட்டுப்பள்ளி தெரு சிராஜூதீன் மனைவி செய்யதுஅலி பாத்திமா (40), காயல்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு நாராயணன் மனைவி பெரிய பிராட்டி (52), காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெரு சம்சுதீன் மனைவி ரகமத் பிவி (48), காஜா முகமது மகன் முகமது சுபின் (21) ஆகியோரது வீடுகளில் இருந்து திருடப்பட்ட ஆடுகள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த 34 ஆடுகளையும் மீட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இந்த ஆடுகளை சின்னத்துரையும், அவரது நண்பரான காயல்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு இசக்கிமுத்து மகன் பூஜைமணி ஆகியோர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 பேரையும் போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டனர். ஆறுமுகநேரி போலீசார் அந்த 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.