கோவில்பட்டியில்புதிய நிழற்குடை திறப்புவிழா
கோவில்பட்டியில் புதிய நிழற்குடை திறப்புவிழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. புதிய பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். தொடர்ந்து மெயின் ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடையில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், அய்யாதுரை பாண்டியன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழக நிதி அமைச்சருக்கு அமெரிக்காவின் பொருளாதாரம் தெரியுமே தவிர, தமிழகத்தின் பொருளாதாரம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஆக்கபூர்வமாக நிதிச் சுமையை கையாளுவதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு மாறுதலையும் அவர் கொண்டு வரவில்லை. அவர் திராவிட பரம்பரையாக இருக்கலாம். அவர் வளர்ந்தது படித்தது எல்லாம் வெளிநாட்டில் தான். அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணியாற்றியவர். அந்தப் பொருளாதாரத்தை மனதில் கொண்டு இங்கு செயல்படுகிறார். இங்குள்ள மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அவரது பொருளாதாரத்துவம் இல்லை. இப்படியே இவர் இருந்தால் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முதல் வேலையை செய்கின்றவராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருப்பார் என்றார்.