கோவில்பட்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:வருகிற 12-ந் தேதி நடக்கிறது
கோவில்பட்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி இணைந்து, வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் 12.08.2023 அன்று காலை 9 மணிக்கு நடத்துகிறது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.
முகாமில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி, என்ஜினீயரிங் பட்டதாரி, டிப்ளமோ, நர்சிங், ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
விவரங்களுக்கு...
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வந்து பங்கேற்கலாம். மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைநாடுநர்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவுசெய்ய வேண்டும். வேலைவாய்ப்புமுகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய Thoothukudi Employment office என்ற Telegram channel-ல் இணையலாம். மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.