கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு புதூர் வட்டாரம் வீரப்பட்டி கிராமம் இந்திரா காலனியை சேர்ந்த மக்கள் நேற்று கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க தலைவர் செண்பகராஜ் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் மனு கொடுத்தனர். அதில் கூறியிருந்ததாவது:-
புதூர் வட்டாரம் வீரப்பட்டி கிராமம் இந்திரா காலனி, அருந்ததியர் தெருவில் சுமார் 25 வீடுகள் உள்ளன. தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 1986-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டது. இதில், அங்கிருந்த 11 வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், மத்திய பகுதியில் பொது பயன்பாட்டுக்காக தேவையான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒவ்வொருவரும் வீட்டின் முன்பு 10 அடி நீட்டிப்பு செய்து வீடுகளை விஸ்தரிப்பு செய்து கொண்டோம். ஆனால் ஒருவர் மட்டும் கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தற்போது எங்கள் சமுதாய மக்கள் பொது பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம் கட்ட இடம் தேவைப்படுகிறது. ஆனால், போதுமான இடம் இல்லாததால் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி தடைபடுகிறது. எனவே, கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்தவரிடம் இருந்து இடத்தை மீட்டு பொது பயன்பாட்டுக்கு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.