கோவில்பட்டியில் தொழிலாளி வீட்டை உடைத்து நகை திருட்டு
கோவில்பட்டியில் தொழிலாளி வீட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபரை போலீசார்தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன் மகன் கார்த்திக் ராஜா (வயது 40). இவர் மில் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.
வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் பின்பக்கம்சென்று பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. இதில் சந்தேகம் அடைந்த கார்த்திக் ராஜா பீரோவை திறந்து பார்த்த போது 1 பவுன் தங்க கம்மல், 1 பவுன் மோதிரம் திருடப்பட்டு இருந்தது. பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.