குறிச்சி அரசு பள்ளிக்கூடத்தில்மேஜை- மின் விசிறிகளை சேதப்படுத்தி சமூக விரோதிகள் அட்டகாசம்


குறிச்சி அரசு பள்ளிக்கூடத்தில்மேஜை- மின் விசிறிகளை சேதப்படுத்தி சமூக விரோதிகள் அட்டகாசம்
x

குறிச்சி அரசு பள்ளிக்கூடத்தில் மேஜை- மின் விசிறிகளை சேதப்படுத்தி சமூக விரோதிகள் அட்டகாசம் செய்துள்ளனா்

ஈரோடு

குறிச்சி அரசு பள்ளிக்கூடத்தில் மேஜை மற்றும் மின்விசிறிகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து உள்ளனர்.

உயர்நிலைப்பள்ளி

அம்மாபேட்டையை அடுத்த குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்துக்குள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி கட்டிடங்களும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளி கட்டிடங்களும், உண்டு உறைவிடப்பள்ளி கட்டிடங்களும் உள்ளன.

இங்குள்ள தொடக்கப்பள்ளியில் 85 மாணவ-மாணவிகளும், உயர்நிலைப்பள்ளியில் 200 மாணவ- மாணவிகளும், உண்டு உறைவிட பள்ளியில் 80 மாணவ- மாணவிகளும் படித்து வருகின்றனர்.

மேஜை- நாற்காலி உடைப்பு

கடந்த சில நாட்களாக இந்த பள்ளிக்கூடத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக மாணவ- மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:- இங்குள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவுக்கூடம் பராமரிப்பு பணி முடிக்கப்பட்ட நிலையில் அதன் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மெர்குரி லைட் மற்றும் டியூப் லைட் ஆகியவற்றை சமூக விரோதிகள் சிலர் உள்ளே நுழைந்து கழற்றி எடுத்து சென்று விட்டனர். மேலும் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு வகுப்பறைகளில் உள்ள மின்விசிறி, டியூப் லைட், மேஜை, நாற்காலி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மின் விசிறியை சேதப்படுத்தி அதில் பிளாஸ்டிக் நாற்காலியை கட்டி வைத்து உள்ளனர். அதுமட்டுமின்றி மதுபாட்டில்களையும் வகுப்பறையில் உடைத்து வீசியதுடன், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றையும் போட்டு சென்று உள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் கழிப்பறைக்கு செல்லும் வழியில் உள்ள தடுப்பு கம்பிகளையும் சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

கடுமையான நடவடிக்கை

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தின் முதல் தளத்தில் 10-ம் வகுப்பறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சமூக விரோதிகள், அங்குள்ள மேஜையை சுற்றி உட்கார்ந்து மது அருந்தியதோடு, மது பாட்டில்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றையும் வீசி சென்று உள்ளனர். இதனால் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு இந்த காட்சிகள் மிகவும் அருவருப்பை ஏற்படுத்தி உள்ளன. படிக்க முடியாமல் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளிக்கூடத்தில் இதுபோன்ற சமூக விரோத ெசயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிக்கூடத்துக்கு இரவு காவலரை பணியமர்த்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story