கூடலூர், மசினகுடி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை அறிய பாட்டில்களை தொங்கவிட்ட விவசாயிகள்
கூடலூர், மசினகுடி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை அறிய பாட்டில்களை விவசாயிகள் தொங்கவிட்டுள்ளனர்.
கூடலூர்
கூடலூர், மசினகுடி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை அறிய பாட்டில்களை விவசாயிகள் தொங்கவிட்டுள்ளனர்.
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்
கூடலூர், மசினகுடி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்துகிறது. இதனால் தினமும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வனத்துறை சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு தொகை வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினரும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் வனத்துறையினருக்கு போக்கு காட்டி ஊருக்குள் புகுந்து விடுகிறது.
கண்ணாடி பாட்டில்கள்
பெரும்பாலும் காட்டு யானைகள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ஊருக்குள் மற்றும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வருகிறது. இந்த சமயத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அயர்ந்து தூங்குவதால் காட்டு யானைகள் வருகையை அறிய முடிவதில்லை. இதன் காரணமாக விவசாய பயிர்களை சேதப்படுத்திவிட்டு காட்டு யானைகள் வனத்துக்குள் சென்று விடுகிறது. இதனால் காட்டு யானைகள் வருகையை தெரிந்துகொள்ளும் வகையில் கூடலூர், மசினகுடி பகுதி விவசாயிகள் நூதன முறையை கையாண்டு வருகின்றனர்.
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வேலியின் கரையோரம் கண்ணாடி பாட்டில்களை வரிசையாக தொங்க விட்டுள்ளனர். இதை அறியாத காட்டு யானைகள் இரவில் குடியிருப்புகள் மற்றும் விவசாய பயிர்களை தேடி வரும்போது வேலியின் கரையோரம் தொங்கவிட்டுள்ள கண்ணாடி பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் சத்தம் எழுகிறது. இதைக் கேட்டு காட்டு யானைகளும் அங்கிருந்து விலகிச் செல்கிறது.
தொடர்ந்து பொதுமக்களும் காட்டு யானைகள் வருவதை அறிந்து உஷாராகி விடுகின்றனர். பின்னர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு நூதன முறையை கையாண்டு விவசாயிகள், பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.