குலசேகரன்பட்டினத்தில்2 வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன் பறிப்பு; 4வாலிபர்கள் சிக்கினர்


குலசேகரன்பட்டினத்தில்2 வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன் பறிப்பு; 4வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:46 PM GMT)

குலசேகரன்பட்டினத்தில் 2 வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன் பறித்த 4வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் 2 வடமாநில தொழிலாளர்களை பேரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வடமாநில தொழிலாளர்கள்

குலசேகரன்பட்டினம் கல்லாமொழி பகுதியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்களாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திரா (வயது 35), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்யாதவ் ஆகியோரும் அங்கு வேலை பார்த்து வருகின்றனர்.

பீர்பாட்டிலால் தாக்குதல்

இந்த 2பேரும் கடந்த 19-ந் தேதி இரவு வேலை முடிந்து தாங்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். குலசேகரன்பட்டினம் பிள்ளைமார் சுடுகாடு வழியாக சென்றபோது, அந்த வழியாக வந்த 4 வாலிபர்கள் அவர்களை வழிமறித்து பீர்பாட்டில், பனை மட்டை போன்றவற்றால் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த அந்த தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் மோகன்தாஸ் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் சிக்கினர்

இந்த விசாரணையில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் ராஜா, மணப்பாட்டை சேர்ந்த ரொனால்ட் மகன் ரஸ்வின், லிவின் மகன் அருள், களக்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகன் பரமசிவன் ஆகிய 4 பேர் சேர்ந்து வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த 4 வாலிபர்களையும் நேற்று குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்து, செல்போன்களை மீட்டனர்.


Next Story