கும்பகோணத்தில், உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம்


சம்பா சாகுபடிக்கு பாய்நாற்றங்கால்கள் தயாராக உள்ளதால் கும்பகோணத்தில் உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

சம்பா சாகுபடிக்கு பாய்நாற்றங்கால்கள் தயாராக உள்ளதால் கும்பகோணத்தில் உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதான தொழில் விவசாயம்

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும். இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் ஆறுகளில் போதிய தண்ணீர் வரவில்லை. மழையை நம்பி இருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே சம்பாவிற்கான சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டனர். போதிய தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் சம்பா சாகுபடி விவசாயிகள் தங்கள் சாகுபடி பணியை தாமதமாக தொடங்கியுள்ளனர்.

சாகுபடி பணிகள் தாமதம்

சம்பா சாகுபடியை பொருத்தவரையில் விவசாயிகள் நீண்ட 180 நாட்கள் நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் சிலர் குறுகிய கால நெல்லை சாகுபடி செய்துள்ளனர். சிலர் அதுவும் தொடங்காமல் விட்டுள்ளனர். சில விவசாயிகள் 180 நாட்கள் நெல்லை சாகுபடி செய்ய பாய்நாற்றங்கல் விட்டுள்ளனர். தற்போது பாய் நாற்றங்கால் நடவுக்கு தயாராகி வருவதால் நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பதும், வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கும்பகோணத்தை அடுத்த ஏரகரம், அசூர், இனாம் அசூர், திருப்புறம்பியம், மாதவபுரம் உள்ளிட்ட பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் நெல் சாகுபடிக்காக நடவுப்பணிகளை மேற்கொள்வதற்காக வயல்களை உழுது தயார் செய்து வருகிறார்கள். நாற்றுகள் பறிக்கும் பணி, நடவுப்பணிகளில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நடவு பணிகள்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூரில் வழக்கம் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருந்தாலும், தேவையான இடங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பம்பு செட் மூலம் விவசாயிகள் சாகுபடியை தொடங்கிவிட்டோம். பொதுவாக நாற்றங்கால் நட்டு 20 நாட்களில் தயார் செய்து விடுவோம். தற்போது பாய்நாற்றங்கால் விட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. சில நாட்களில் நடவுக்கு தயாராகி விடும்.

தற்போது நாங்கள் தயார் செய்த நெல்லானது மோட்டோ 1009 என்ற ரகத்தை சாகுபடிக்கு தயார் செய்துள்ளோம். தற்போது நாங்கள் சாகுபடி செய்த நெல்லானது. மழைக்கு தாக்கு பிடிக்க கூடிய வகையில் நன்றாக வளர கூடியது. சம்பா சாகுபடிக்கான உரம், பூச்சிகொல்லிகள் போதிய இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யவேண்டும் என்றனர்.


Next Story