கும்பகோணத்தில், விவசாயிகள் சாலை மறியல்


கும்பகோணத்தில், விவசாயிகள் சாலை மறியல்
x

பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் கும்பகோணத்தில், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் கும்பகோணத்தில், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் பகுதியில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் கடந்த சில வாரங்களாக பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் தங்களது பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் பருத்தியை வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

பருத்தி ஏலம்

இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 80-ம், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 380-ம் மத்திய அரசு நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 3 வாரங்களாக கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்று வரும் பருத்தி ஏலத்தில் கலந்து கொள்ளும் வெளியூர் வியாபாரிகள் மத்திய அரசின் விலையை விட குறைந்த விலைக்கு பருத்தியை ஏலம் எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருத்தி 30 முதல் 40 சதவீதம் விலை குறைத்து ஏலம் போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 700 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் குறைந்த அளவிலான பருத்தி வியாபாரிகள் மட்டுமே கலந்து கொண்டு பருத்தி கிலோ ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ 59-ம், அதிகபட்சம் ரூ.66 வரை ஏலம் எடுத்தனர்.

சாலை மறியல்

பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததை கண்டித்தும், பருத்திக்கு கட்டுப்படியான விலையை மத்திய,மாநில அரசுகள் நிர்ணயம் செய்யக் கோரி கும்பகோணம் - திருவையாறு சாலையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை அங்கிருந்து வலுகட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story