பெருந்துறையில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய தம்பதி கைதுமதுரையை சேர்ந்தவர்கள்


பெருந்துறையில் வீடுபுகுந்து நகை-பணம் திருடிய மதுரையை சேர்ந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பெருந்துறையில் வீடுபுகுந்து நகை-பணம் திருடிய மதுரையை சேர்ந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திறந்து கிடந்த வீடு

பெருந்துறை பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 42). இவருடைய மனைவி ரேணுகாதேவி (35).

இவர்களுக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை குன்னத்தூர் ரோட்டில் உள்ளது.

கடந்த 7-ந் தேதி காலை 10 மணி அளவில் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி சாவியை ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டு எலெக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுவிட்டனர்.

காலை 11 மணி அளவில் வீடு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் கவுரிசங்கருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே பதறி அடித்து கணவனும், மனைவியும் வீட்டுக்கு சென்ற பார்த்தனர்.

நகை-பணம் திருட்டு

அப்போது வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 7¼ பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிந்தது.

இதுகுறித்து அவர்கள் உடனே பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது திருட்டு நடந்த வீட்டின் அருகே ஒரு ஆணும், பெண்ணும் ஸ்கூட்டரில் செல்வது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று பெருந்துறை போலீசார் விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஒரு ஆணும், பெண்ணும் ஸ்கூட்டரில் வந்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

கணவன், மனைவி கைது

விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த சையத் அலி (வயது 37) என்பதும், அவருடன் ஸ்கூட்டரில் வந்தது அவரின் மனைவி கற்பகம் என்கிற பானு என்பதும் தெரியவந்தது.

மேலும் சம்பவத்தன்று கவுரிசங்கர் வீட்டை பூட்டி சாவியை வைப்பதை சையத்அலியும், கற்பகமும் பார்த்துள்ளனர்.

அவர் சென்றதும் இருவரும் உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 7¼ பவுன் நகையை திருடிச்சென்றது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்அலியையும், கற்பகத்தையும் கைது செய்தனர்.


Next Story