மதுரை மாவட்டத்தில் காச நோய் பாதிப்பு 40 சதவீதம் குறைந்தது-மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது
மதுரை மாவட்டத்தில் காச நோய் பாதிப்பு 40 சதவீதம் குறைந்து உள்ளது. அதனால் மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
மதுரை மாவட்டத்தில் காச நோய் பாதிப்பு 40 சதவீதம் குறைந்து உள்ளது. அதனால் மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
பாராட்டு
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் காசநோய் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் காசநோய் ஒழிப்புக்காக சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் மதுரை மாவட்டத்திற்கு வெள்ளி பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதனை தமிழகம் சார்பில் பங்கேற்ற தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ் பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழையும் பெற்று வந்தார்.
அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் விழா நடத்தப்பட்டது. அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, துறைச் செயலாளர் செந்தில் குமார், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், மாநில காசநோய் அலுவலர் ஆஷா பிரடெரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மதுரை மாவட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
40 சதவீதம்
இதற்கிடையில் மதுரை மாவட்டத்தின் காசநோய் துறையின் துணை இயக்குனர் சுபைர் ஹசன் முகம்மது கான், கலெக்டர் அனிஷ் சேகரை சந்தித்து மதுரை மாவட்டத்திற்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். அதில் இணை இயக்குனர் செல்வராஜ், துணை இயக்குனர் நலப்பணிகள் அர்ஜுன் குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், துணை இயக்குனர் (குடும்பநலம்) மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் பலனாக கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் காசநோயின் பாதிப்பு தற்போது மதுரை மாவட்டத்தில் 40 சதவீதம் குறைந்துள்ளது. அதனை பாராட்டும் விதமாக மத்திய அரசின் சார்பில் வெள்ளி பதக்கம் மதுரை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். மேலும் அவர்கள் வருகின்ற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மதுரை மாவட்டமாக மாற்றுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றனர்.