மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி திட்டப்பகுதியில் மழைநீர் வடிகால் குழாய் ஆக்கிரமிப்பு; மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சி தலைவர் புகார்


மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி திட்டப்பகுதியில்  மழைநீர் வடிகால் குழாய் ஆக்கிரமிப்பு;  மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சி தலைவர் புகார்
x

மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி திட்டப்பகுதியில் மழைநீர் வடிகால் குழாய் ஆக்கிரமித்துள்ளதாக மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சி தலைவர் புகார் அளித்துள்ளாா்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் எஸ்.டி. தங்கமுத்து. இவர் மாநகர் மன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவர் மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி திட்ட பகுதி மக்களுடன் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சு.நாகரத்தினத்தை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி திட்டப்பகுதியில் 70 வீடுகள் உள்ளன. இதில், 2 வீடுகளுக்கு இடையில் 4½ அடி அகலம், 40 அடி நீளமுள்ள இடம் யாருக்கும் பொது இடமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.இந்த ஆக்கிரமிப்பு பகுதியில்தான் மழைநீர் வடிகால் குழாய் உள்ளது. இந்த குழாய் மாநகராட்சி மூலம் பதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மழை நீர் வெளியே செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்பாளர்கள் அடைத்து வைத்துள்ளனர். இதனால், மழை நீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. எனவே, மாநகராட்சியின் நில அளவையர்கள் மூலமாக குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் வெளியே செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட மேயர் சு.நாகரத்தினம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


Next Story