மஞ்சூரில் தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி பலி- மது போதையில் தூங்கியபோது பரிதாபம்
மஞ்சூரில் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி
மஞ்சூரில் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருடைய சகோதரி ஒருவர் மஞ்சக்கொம்பையில் வசித்து வருகிறார்.
இதனால் மஞ்சூரில் தனியாக வசித்து வந்த மணிகண்டன் போலீஸ் நிலையம் அருகே ஒரு தகரகூரை வீட்டில் வசித்து வந்தார். மேலும் மஞ்சூர் கடை பஜாரில் மூட்டை சுமக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கி உள்ளார்.
உடல் கருகி பலி
அந்த வீட்டில் மின்சார இணைப்பு இல்லை என்பதால் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி மற்றும் மண்எண்ணெய் விளக்கை அருகில் பற்ற வைத்து உள்ளார். இந்த நிலையில் மரக்கட்டில் அருகில் இருந்த மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அதிலிருந்து தீ கட்டிலுக்கு பரவி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் தீக்காயம் அடைந்த மணிகண்டன் வெளியே வர முயற்சி செய்துள்ளார். ஆனால் போதையில் தள்ளாடியபடி இருந்ததாலும், கடும் புகைமூட்டம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாலும் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
புகை மூட்டத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து மஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.