மார்த்தாண்டம்பட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
மார்த்தாண்டம்பட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே மார்த்தாண்டம்பட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறினார்.
ரூ.4 லட்சம் நிதியுதவி
விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி மாலதி (வயது47) கடந்த 14-ந்தேதி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மின்னல் தாக்கி உயிரிழந்த மாலதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல்-அமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் எட்டயபுரம் ரோட்டில் பஞ்சாயத்து யூனியன் புதிய அலுவலக கட்டிடம் ரூ.2.83 கோடி செலவில் கட்டப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய அலுவலக கட்டிடத்தை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவில்பட்டியில் புதிய அலுவலக கட்டிடத்தில் நடந்த விழாவில், அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் கலெக்டர், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தாசில்தார் சுசீலா, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், மேலாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்துடன் அமைச்சர் கீதா ஜீவன் வித்யா பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளிக்குச் சென்றார். அங்கு தலைமையாசிரியர் ஐடா தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்றார்கள். அமைச்சர் அவர்களிடம் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டார்.
விளாத்திகுளம்
விளாத்திகுளத்தில் மதுரை சாலையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு ரூ.3.05 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலக கட்டிடத்தை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். விளாத்திகுளத்தில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றினார். விழாவில், மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் துணைத்தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.