முத்தையாபுரத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
முத்தையாபுரத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவு குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம்பெண்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் திருமாஜி நகரை சேர்ந்தவர் சகாய பூண்டி செல்வம். டிரைவர். இவருக்கும் லீலாவதி (வயது24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. லீலாவதி டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக தம்பதியர் டாக்டரிடம் பரிசோதனையும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் குழந்தை இல்லாததால், லீலாவதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கினார்
நேற்றுகாலையில் சகாயபூண்டிசெல்வம் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்ைத இல்லாத ஏக்கத்தில் இருந்து லீலாவதி வீட்டில் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
உதவி கலெக்டர் விசாரணை
போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இவரது சாவு குறித்து உதவிகலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.