முத்துப்பேட்டையில், 4 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
முத்துப்பேட்டையில், 4 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
கோவையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டையில் 4 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
என்.ஐ.ஏ. போலீசாரால் 4 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர்கள் இம்தியாஸ் (வயது 29), ரிஸ்வான் அகமது(28), சாஜித் அகமது(30). கடந்த 2018-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடந்தது.
இந்த வழக்கில் சந்தேகம் அடைந்த என்.ஐ.ஏ. போலீசார் இம்தியாஸ், ரிஸ்வான் அகமது, சாஜித் அகமது ஆகியோரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் முத்துப்பேட்டை தென்னை மரக்கடை தெருவை சேர்ந்த முகமது மைதீன் மகன் அசாரூதீன் என்பவருக்கு அரபு நாடுகளில் உள்ள அன்சுருல்லா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த 2019-ம் ஆண்டு அசாரூதின் வீட்டில் என்.ஐ.ஏ. போலீசார் சோதனை செய்து அவரையும் கைது செய்தனர். தற்போது அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானர். இது தொடர்பாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் ஏற்கனவே குற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் கடந்த சில தினங்களாக போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
4 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை
அதன் ஒரு பகுதியாக நேற்று காலை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் நேரடி மேற்பார்வையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மகாலட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த பத்மநாபன்(எடையூர்), விஜயா(களப்பால்), ஹேமலதா(திருக்களார்) ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் முத்துப்பேட்டையில் உள்ள ஏற்கனவே என்.ஐ.ஏ. போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்தியாஸ், ரிஸ்வான் அகமது, சாஜித் அகமது, அசாரூதீன் ஆகிய 4 பேரின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை ெதாடர்ந்து 4 மணி நேரம் நடந்தது.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
இந்த சோதனையின்போது 4 பேரின் வீடுகளிலும் இருந்து செல்போன்கள், பெண் டிரைவ் மற்றும் சி.டி. உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.