நடுக்குப்பம் ஊராட்சியில் மதுக்கடையை முழுமையாக அகற்ற வேண்டும்


நடுக்குப்பம் ஊராட்சியில் மதுக்கடையை முழுமையாக அகற்ற வேண்டும்
x

மேற்கு ஆரணி நடுக்குப்பம் ஊராட்சியில் இருந்து மதுக்கடையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

மேற்கு ஆரணி நடுக்குப்பம் ஊராட்சியில் இருந்து மதுக்கடையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் முருகேஷ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மதுக்கடையை அகற்ற வேண்டும்

கூட்டத்தில் ஆரணி தாலுகா மேற்கு ஆரணி நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-



நடுக்குப்பம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பள்ளிக்கு அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகும் சூழல் அதிகளவில் உருவானது. இதனால் பள்ளிக்கு அருகில் செயல்படும் மது கடையை முழுமையாக எங்கள் ஊராட்சியில் இருந்து அகற்ற பலமுறை கிராம சபை கூட்டங்களிலும், நேரடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மேலாளர், கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களிலும் மனு அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தற்போது நடுக்குப்பம் ஊராட்சியில் உள்ள விநாயகபுரம் என்ற பகுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. அந்த இடத்தில் விவசாய நிலங்கள், கோவில், இடுகாடு, குளம், ஏரி போன்ற நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. மேலும் எங்கள் ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு அந்த வழியாக காமக்கூர்பாளையம் கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் வருகின்றனர். இதனால் எங்கள் ஊராட்சியில் புதிதாக அந்த இடத்தில் மதுகடை திறக்கக்கூடாது. ஊராட்சியில் இருந்து முழுமையாக மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அய்யனாரப்பன் கோவில்

திருவண்ணாமலை அருகில் உள்ள மேல்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவண்ணாமலை தொகுதி செயலாளர் நியுட்டன் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் மணலூர்பேட்டை சாலையில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல்கச்சிராப்பட்டு கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும் 300 வருட காலமாக பூஜை செய்து வழிபாடு செய்வதோடு திருவிழாக்கள், திருமணங்கள், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அய்யனாரப்பன் கோவிலை சுற்றியுள்ள இடத்தில் சடங்குகள் நடைபெற்று வருவதால் தற்போது திருவண்ணாமலை வருவாய்த்துறையினர் அந்த இடத்தை தரிசு நிலம் என்று தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயல்கின்றார்கள். எனவே இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபடவும் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மண்எண்ணெய் கேன் பறிமுதல்

செங்கம் தாலுகா பெங்களூரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கலைவாணன் (வயது 54) என்பவர் நிலபிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கூட்டத்தில் மனு அளிக்க அழைத்து சென்றனர்.


Next Story