நடுகூடலூரில் வீட்டின் சுவரை உடைத்து காட்டு யானை அட்டகாசம்-வாழை உள்ளிட்ட பயிர்களை அகற்ற வனத்துறையினர் உத்தரவு
நடு கூடலூரில் அதிகாலையில் வந்த காட்டு யானை வீட்டு மதில் சுவரை உடைத்து தள்ளியது. இதனால் காட்டு யானை வராமல் இருக்க வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை அகற்றும் படி வனத்துறையினர் உத்தரவிட்டனர்.
கூடலூர்
நடு கூடலூரில் அதிகாலையில் வந்த காட்டு யானை வீட்டு மதில் சுவரை உடைத்து தள்ளியது. இதனால் காட்டு யானை வராமல் இருக்க வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை அகற்றும் படி வனத்துறையினர் உத்தரவிட்டனர்.
வீட்டு மதில்சுவரை உடைத்தது
கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு நடு கூடலூருக்குள் காட்டு யானை வந்தது. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி என்பவரது வீட்டு மதில் சுவரை உடைத்து தள்ளியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில வாரங்களாக காட்டு யானை தொடர்ந்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
வாழைகளை வெட்டி அகற்றினர்
பின்னர் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று சேதமடைந்த சுவரை பார்வையிட்டனர். பின்னர் காட்டு யானைக்கு மிகவும் பிடித்தமான பாக்கு வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை வீட்டின் அருகே வளர்க்கக்கூடாது.
அவ்வாறு பராமரித்து வரும் பயிர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இதை ஏற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த வாழைகளை வெட்டி அகற்றினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பல மாதங்களாக காட்டு யானை ஊருக்குள் வருகிறது. இதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.