நாகையில், கட்டுப்பாட்டு மையம் அமைப்பு
பெண்களின் கர்ப்பகால சந்தேகங்களை தீா்க்கும் வகையில் நாகையில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது என கலெக்்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
பெண்களின் கர்ப்பகால சந்தேகங்களை தீா்க்கும் வகையில் நாகையில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது என கலெக்்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம், குடும்ப நலம் தொடர்பான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் அமுதாஜோஸ்பின், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தமிமுன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி கலெக்டர் அருண்தம்புராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுப்பாடு மையம்
கடந்த ஆண்டில் மாநில அளவில் கர்ப்பிணிகள் மரணம் அதிக அளவில் இருந்தது. இதை தடுக்கும் வகையில் அனைத்து மருத்துவ துறை மற்றும் சுகாதாரத்துறையின் ஒத்துழைப்பின் அடிப்படையில் கர்ப்பிணிகளின் மரணம் இந்த ஆண்டு குறைந்துள்ளது.நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தும் வகையில் 9442374310 என்ற செல்போன் எண்ணில் வம்சம் என்கிற கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. கர்ப்பகாலத்தின் போதும், பிரசவத்தின் போதும், பிரசவத்துக்கு பின்பு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் ரத்தசோகை உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இந்த தொலைபேசி எண்ணின் மூலம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
அனைத்து அரசு ஆஸ்பத்திாிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடையும் தாய்மார்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.600 மற்றும் மாவட்ட கலெக்டர் நிதியாக ரூ.1400 என ரூ.2000 வழங்குவதுடன் ஏராளமான நல உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. தாய்மார்கள் முதல் 6 மதத்துக்கு தாய்ப்பாலை மட்டுமே குழந்தைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.