நாகலாபுரத்தில்கால்நடை மருத்துவமனை கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா
நாகலாபுரத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
எட்டயபுரம்:
நாகலாபுரத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடத்துக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழா
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் புதூர் ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாகலாபுரத்தில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் அருண்குமார், விளாத்திகுளம் தி.மு.க ஒன்றிய செயலாளர் அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் உலகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரேஷன்கடைக்கு பூமிபூஜை
இதேபோன்று, விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம் ஊராட்சி இலந்தகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ரேஷன்கடை கட்டிடத்துக்கான பூமி பூஜையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.