நாகூரில், 7 பைபர் படகுகளின் என்ஜின்கள், வலைகளை ஆற்றில் வீசிய மர்ம நபர்கள்
நாகூரில், மீன் விற்பனை செய்வதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பினருடைய 7 பைபர் படகுகளின் என்ஜின்கள் மற்றும் வலைகளை மர்ம நபர்கள் ஆற்றில் வீசினர். இதன் காரணமாக துறைமுகத்தில் மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகூர்:
நாகூரில், மீன் விற்பனை செய்வதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பினருடைய 7 பைபர் படகுகளின் என்ஜின்கள் மற்றும் வலைகளை மர்ம நபர்கள் ஆற்றில் வீசினர். இதன் காரணமாக துறைமுகத்தில் மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன் விற்பனை செய்வதில் பிரச்சினை
நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் ஏலம் விடுவதில் இருதரப்பு மீனவர்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
மேலபட்டினச்சேரி பகுதியை சேர்ந்த மீனவர்களை நேரடியாக மீன் விற்பனை செய்ய அனுமதிக்காத கீழபட்டினச்சேரியை சேர்ந்த கிராம நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 15-ந் தேதி நாகூர்-காரைக்கால் சாலையில் மீன்களை கொட்டி ஒரு தரப்பு மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
படகு என்ஜின்கள் ஆற்றில் வீச்சு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மேலபட்டினச்சேரி கிராமத்தை சேர்ந்த மீனவர்களின் 7 பைபர் படகுகளில் இருந்த என்ஜின்கள் மற்றும் வலைகளை மர்ம நபர்கள், அந்த பகுதியில் உள்ள வெட்டாற்றில் தூக்கி வீசினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலபட்டினச்சேரி பகுதியை சோ்ந்த மீனவர்கள் மற்றும் பெண்கள் நாகூர் துறைமுகத்தில் திரண்டனர். அப்போது ரூ.10 லட்சம் மதிப்பிலான படகு என்ஜின்களை ஆற்றில் வீசியதால் எப்படி மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும் என கூறி மீனவ பெண்கள் கதறி அழுதனர். இதை தொடர்ந்து மீனவர்கள், ஆற்றில் இறங்கி படகு என்ஜின்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பரபரப்பு
ரூ.10 லட்சம் மதிப்பிலான படகு என்ஜின்கள் மற்றும் வலைகளை சேதப்படுத்தி உள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்படும். அரசுக்கு சொந்தமான மீன்பிடி துறைமுகத்தில் பாகுபாடு இன்றி தங்களுக்கும் சம உரிமை வழங்கி மீன்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில் படகு என்ஜின்கள் மற்றும் வலைகளை ஆற்றில் வீசிய சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கீழபட்டினச்சேரி மீனவர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
படகு என்ஜின்கள் மற்றும் வலைகளை மர்ம நபர்கள் ஆற்றில் வீசிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் மற்றும் கீழபட்டினச்சேரி மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை கூட்டம் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடந்தது.