ஆன்லைன் பரிவர்த்தனையில் விவசாயி இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசார்
கூடலூரில் ஆன்லைன் பரிவர்த்தனையில் விவசாயி இழந்த பணத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர்
கூடலூரை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவர் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் தனது நண்பருக்கு ரூ.12 ஆயிரத்து 100 அனுப்ப முயன்றார். அப்போது கவனக்குறைவால் நண்பரின் வங்கிக் கணக்குக்கு பதில் வேறு ஒருவரின் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி விட்டார். அந்த ஆன்லைன் பரிவர்த்தனையில் இழந்த பணத்தை மீட்க அவர் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால், வங்கி நிர்வாகம் பணத்தை மீட்டுக் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சேகர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில், 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, சேகர் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். பின்னர், அந்த பணத்தை சேகரிடம் தேனி சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேற்று ஒப்படைத்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் உடனிருந்தார்.