ஊஞ்சலூரில்சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் தரிசனம்
திரளான பக்தர்கள் தரிசனம்
ஊஞ்சலூர் தெற்கு வீதியில் பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பு யாக சாலை அமைக்கப்பட்டு, விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் கொண்டு வந்தார்கள். இரவு 7 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து யாகசாலையில் வைத்தார்கள்.
அதன்பின்னர் முதற்கால யாக பூஜை வேள்விகள், கோபுரம் கண் திறப்பு, கலசம் வைத்தல், மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜை தொடங்கியது. திரவிய ஹோமங்கள், அஸ்திர ஹோமங்கள், நாடி சந்தானம், உயிர் சக்தி ஊட்டுதல், கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.
9 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க சித்தி விநாயகர் கருவறை கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊஞ்சலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சித்தி விநாயகரை தரிசனம் செய்தார்கள். கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் அருகே உள்ள சமுதாய கூடத்தில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.