ஊட்டியில் பரபரப்பு-பூரான் கிடந்த பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி -மயக்கம்
ஊட்டியில் பூரான் இருந்த பிரியாணி சாப்பிட்ட 4 வாடிக்கையாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் பூரான் இருந்த பிரியாணி சாப்பிட்ட 4 வாடிக்கையாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
பார்சல் பிரியாணியில் பூரான்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எம்.பாலாடா சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் கேரட் விவசாயம் நடக்கிறது. இதனால் இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் எம்.பாலாடா பஜார் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தங்களுக்கு தேவையான உணவை வாங்கி வந்தனர்.
இதில் எம்.பாலாடா அருகில் உள்ள நரிக்குழியாடா பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் நேற்று அந்த பகுதியில் உள்ள மம்மி மெஸ் என்ற ஓட்டலில் 4 பிரியாணி வாங்கியுள்ளார். இதை கிருஷ்ணசாமியும் அவருடன் பணியாற்றியவர்களும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பிரியாணியில் பாதி சாப்பிட்டு முடித்த பின்னர், தியாகராஜன் என்பவரது பிரியாணியின் அடிப்பகுதியில் பூரான் இறந்து கிடந்தது.
வாந்தி -மயக்கம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, தியாகராஜன் உள்பட 4 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் எம்.பாலாடாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஓட்டலில் கேட்டபோது ஓட்டல் நிர்வாகத்தினர் முறையாக பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் தலைமையிலான குழுவில் நேரில் சென்று அந்த ஓட்டலில் ஆய்வு செய்தனர்.
அபராதம் விதிப்பு
அந்த ஓட்டலில் இட வசதி இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது ஆய்வில் தெரியவந்தது. எனவே சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்த காரணத்திற்காக ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் சமையல் அறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உணவு பொருட்களை மூடிய நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போல் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.