ஊட்டியில் வாடகை செலுத்தாத 78 கடைகளுக்கு சீல் வைப்பு-எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 78 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட்டில் வியாபாரிகள் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 78 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட்டில் வியாபாரிகள் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடகை நிலுவை
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூ.40 கோடி செலுத்தாத தால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகளில் ஒரு சிலர் முழு தொகையையும் ஒரு சிலர் பாதித்தொகையையும் செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட்டன.
78 கடைகளுக்கு 'சீல்'
பின்னர் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். அத்துடன் அவர்கள் வாடகை செலுத்த காலக் கெடுவும் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் வாடகையை செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில் அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி கடந்த ஒரு வாரத்திற்குள் இறைச்சி, பேன்சி, மளிகை கடைகள் உள்பட 78 கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது. சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் வாடகை செலுத்திய பின்னர் சீல் அகற்றப்படும். வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நேற்று 24 கடைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் வாடகை செலுத்த கால அவகாசம் வழங்க கோரி மார்க்கெட் வளாகத்தில் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ரூ.18 கோடி வசூல்
இதுகுறித்து நகராட்சி வருவாய் ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை தொகையை செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சீல் நடவடிக்கையை தொடர்ந்து ரூ.40 கோடி பாக்கி இருந்த நிலையில் தற்போது வரை ரூ.18 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்கட்டணம் மட்டும் ரூ.14 கோடி பாக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே மீதமுள்ள நிலுவையை வசூலித்தால் தான் நகராட்சி நிர்வாக பணிகளை தொய்வின்றி செயல்படுத்த முடியும், என்றார்.