பாளையங்கோட்டையில் குடியரசு தின விழா; கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்
குடியரசு தினவிழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று கலெக்டர் விஷ்ணு தேசிய கொடி ஏற்றுகிறார்.
பாளையங்கோட்டை:
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் குடியரசு தினவிழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு, காலை 8.10 மணிக்கு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதன்பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் கலெக்டர் விஷ்ணு, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகிறார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளையும் கவுரவப்படுத்துகிறார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமையில் பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்தபிரகாஷ் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் செய்து உள்ளனர். மைதானம் சரி செய்யும் பணி மற்றும் ஒலிபெருக்கி, மின்விளக்குகள் அமைக்கும் பணி உள்ளிட்டவை நடந்தது.
குடியரசு தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் போலீசார், என்.சி.சி. மாணவர்கள், தீயணைப்பு துறையினர் உள்பட பல்வேறு துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நேற்று நடந்த இறுதி கட்ட ஒத்திகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சியில் இருந்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விழா மேடையை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதிகளில் அனுமதி பெறாமல் டிரோன்கள், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இன்ஸ்பெக்டர் செல்வி அறிவுறுத்தலின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியதாஸ், ஜெயக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், காவலர்கள் புஷ்பலீலா, சுரேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் அமீர் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த ரெயில்களில் சோதனை நடத்திய பின்னர், தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன எந்திரம் மூலமாக சோதனை செய்தனர். தொடர்ந்து பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்தனர்.
இதேபோல் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் காலை 7 மணி அளவில் மேயர் பி.எம்.சரவணன் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.