பரமன்குறிச்சியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்


பரமன்குறிச்சியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
x

பரமன்குறிச்சியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே குருநாதபுரத்தில் 10 நாட்களாக பழுதான டிரன்ஸ்பார்மரை மாற்றாத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டிரான்ஸ்பார்மர் பழுது

உடன்குடி அருகிலுள்ள பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலக எல்கைக்கு உட்பட்ட குருநாதபுரத்தில் உள்ள டிரன்ஸ்பார்மரை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் கடந்த செப்.1-ந் தேதி சிறிது பழுது ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் பரமன்குறிச்சி வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த செப். 5-ந்தேதி டிரான்ஸ்பார்மர் முற்றிலும் பழுதடைந்துவிட்டது. உடனடியாக தகவல் கொடுத்தும் அதிகாரிகள் காலதாமதமாக வந்து டிரன்ஸ்பார்மரை தூத்துக்குடிக்கு எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை அதை பழுதுநீக்காததால், இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய அலுவலகம் முற்றுகை

இதனால் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், வெற்றிலை, வாழை, முருங்கை, தென்னை போன்ற பயிர்கள் கருகி விட்டதாகவும், உடனடியாக பழுதுநீக்கி டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்இணைப்பு கொடுக்க வலியுறுத்தி நேற்று பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், பரமன்குறிச்சி ஊராட்சி தலைவர் இலங்காபதி, மாவட்ட அன்னையர் முன்னணி பொறுப்பாளர் கேசவன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சோனியா, சிவபிரகாஷ், திருச்செந்தூர் மின் துறை அதிகாரி முத்துராமன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணிக்குள் டிரன்ஸ்பார்மரை மாற்றி மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், பரமன்குறிச்சி பகுதியில் அதிகஅளவு விவசாயம் நடந்து வருகிறது. மின்பழுது ஏற்பட்டால் சரி செய்ய போதிய பணியாளர்கள் இல்லை. எனவே உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது திருச்செந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் பரமன்குறிச்சி பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இப்பகுதிக்கு போதிய பணியாளர்களை நியமிக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Next Story