போலீஸ் வாகன சோதனையில்; மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின
வானகரம் அருகே போலீஸ் வாகன சோதனையில் மோட்டார்சைக்கிளில் கொண்டு வந்த வீச்சரிவாள், 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
மதுரவாயல்,
சென்னை மதுரவாயல் போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை மறித்து அதில் வந்த வாலிபரிடம் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் அவரிடம் இருந்த பையை சோதனை செய்ய முயன்றனர். உடனே அந்த வாலிபர், மோட்டார்சைக்கிள் மற்றும் பையை விட்டு விட்டு அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
நாட்டு வெடிகுண்டுகள்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் இருந்த பையை திறந்து பார்த்தனர். அதில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு வீச்சரிவாள், 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பையை அப்படியே வைத்து விட்டு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளையும் பரிசோதனை செய்தனர். அவை எந்த வகையான நாட்டு வெடிகுண்டுகள் என்பதை ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள், அதனை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மதுரவாயல் போலீசார் அரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளை கொண்டு வந்த வாலிபர் யார்?, யாரை தீர்த்துகட்ட அவர் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாளுடன் வந்தார்? என விசாரித்து வருகின்றனர்.