தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்
தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தடுப்பூசி முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா விராலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 31-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். அதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநில அளவிலான தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதத்தை காட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (நேற்று) 3 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 458 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி
கேரள மாநிலத்தில் பரவி வரும் தக்காளி காய்ச்சலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 13 எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை தற்போதுள்ள அரசின் அதிரடி நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது. கஞ்சா ஆபரேசன் 1, 2 என்ற நடவடிக்கையால் 3,644 பேர் கைது செய்யப்பட்டு விற்பனையாளர்கள் பலரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலவசமாக...
தற்போது, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் இன்னும் ஓரிரு நாட்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.