கருப்பூர் அருகே, நாளை நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 270 நிறுவனங்கள் பங்கேற்கின்றன அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


கருப்பூர் அருகே, நாளை நடக்கும்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்   270 நிறுவனங்கள் பங்கேற்கின்றன  அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2022 1:45 AM IST (Updated: 25 Nov 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

கருப்பூர் அருகே நாளை நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 270 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம்,

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நாளை (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கருப்பூர் அருகே உள்ள பத்மவாணி கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

பேட்டி

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் கருப்பூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 270-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமின் மூலம் சுமார் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிறுவனங்கள் நேர்காணல் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடாக 100 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி வேலை நாடுனர்களை சிறப்பு வாகனம் மூலம் முகாம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவதோடு, போதுமான எண்ணிக்கையிலான வீல்சேர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், நர்ஸ், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) வாகி சங்கீத் பல்வந்த், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story