மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக மேட்டூர் அணையின் 16 கண் மதகு கள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம்

மேட்டூர்:

நீர்மட்டம்

தமிழகம் முழுவதும் இந்த மாதம் முதல் வாரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தீவிரம் அடைந்தது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த 12-ந் தேதி அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.

அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையிலும் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால் அணையின் உபரி நீர் போக்கியான 16 மதகுகள் வழியாக 12-ந் தேதி காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 25-ந் தேதி காலை அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது மாலையில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் மதியம் வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையைெயாட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதாவது 14 நாட்களுக்கு பிறகு 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கால்வாய் பாசனம்

மேலும் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் வினாடிக்கு 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 22 ஆயிரத்து 250 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Next Story