அனைவருக்கும் வாய்ப்பளிக்கவே புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் சேலத்தில், அமைச்சர் பொன்முடி பேச்சு
அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கவே புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சேலத்தில் நடந்த விழாவில் பேசினார்.
சேலம்,
கருணாநிதி ஆய்வு மையம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் திராவிடவியல் படிப்பகம், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆய்வு மையம் ஆகியவை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். பதிவாளர் கோபி வரவேற்று பேசினார். கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவர் சுப.வீரபாண்டியன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பட்டதாரிகளில் 75 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். திராவிட இயக்கத்தின் உச்சமாக இதை பார்க்க முடிகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் உயர்கல்வித்துறை தற்போது உயர்ந்திருக்கிறது. திராவிட இயக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கருணாநிதி ஆய்வு மையம் செயல்பட வேண்டும்.
குறிப்பாக கல்லூரி மாணவிகள் திராவிட இயக்கங்கள் மற்றும் சமூக நீதிக்கொள்கையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய வரலாற்றில் தமிழர்களின் சமூக பங்களிப்பு மறைக்கப்பட்டது. பெண் கல்வி முக்கியம் என்று பெரியார் கூறாவிட்டால், தற்போது இவ்வளவு பெண்கள் கல்வி பயின்று இருக்க முடியாது.
அனுமதி மறுக்கப்பட்டது
திராவிட மாடல் என்பதை கிண்டல் செய்பவர்கள் இருக்கிறார்கள். கல்விக்காக திராவிடம் ஆற்றிய பணிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் திராவிட இயக்கம். சாதி, மத வேறுபாடுகளை கடந்து மனிதர்களை மதிக்க வேண்டும் என்பதை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினர்.
கருணாநிதி 6-ம் வகுப்பில் சேர திருவாரூர் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது அவர் குளத்தில் குதித்துவிடுவேன் என்று கூறிய பிறகு அனுமதி கிடைத்தது.
கருணாநிதியின் வரலாற்றை ஆய்வு செய்வது அவ்வளவு எளிதல்ல. கருணாநிதி ஆய்வு மையம் சேலம் மண்ணில் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுவது சிறப்பாகும். எனவே இளைஞர்கள், மாணவ, மாணவிகள் திராவிடயிசம் என்னும் மனிதாபிமானத்தை விட்டு விடாதீர்கள்.
இரு மொழிக்கொள்கை
புதிய கல்விக்கொள்கையில் 3-ம் வகுப்பிற்கு நுழைவுத்தேர்வு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என உள்ளது. இவ்வளவு தேர்வு எழுதி அதிகம் பேர் படிக்க முடியாது.
எனவே கல்வியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. இரு மொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். சமூக நீதி, இட ஒதுக்கீடு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றத்தான் சமூக நீதி கண்காணிப்பு குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்கு திராவிட மாடல் தான் காரணம். படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.
திராவிட மாடல் ஆட்சி
அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையில் வேற்றுமை. இங்கு சாதி அடிப்படையில் வேற்றுமை நிலவியது. இந்த நிலையை மாற்ற முயற்சித்தது திராவிடம் என்றால் மிகையில்லை.
கடந்த காலத்தில் திராவிட என்ற சொல்லையே ஏற்காத நிலையில் தற்போது பல்கலைக்கழகங்களில் திராவிடவியல் பற்றி நூலகம் திறக்கும் அளவிற்கு நிலைமை மாற திராவிட மாடல் ஆட்சி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.