உப்புக்கோட்டையில் எலக்ட்ரீசியனை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
உப்புக்கோட்டையில் எல்கட்ரீசியளை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிடா முட்டு சண்டை நேற்று முன்தினம் நடந்தது. சண்டையில் உப்புக்கோட்டை அருகே உள்ள கூழையனூரை சேர்ந்த சீனிராஜ் (வயது 55) கிடாவும், மதுரையை சேர்ந்த ஒருவரின் கிடாவும் மோதின. இதில் 2 கிடாவும் சமநிலை அடைந்தது. அப்போது மதுரை சோ்ந்தவர் கிடாவுக்கு, உப்புக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியனான சுரேஷ் (28) ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்புக்கோட்டை குச்சனூர் சாலையில் உள்ள டீக்கடை முன்பு நின்று சுரேஷ் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சீனிராஜ், போடியை சேர்ந்த கோபால் மற்றும் மதுரையை சேர்ந்த 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள், மதுரைக்காரருக்கு ஆதரவு தெரிவிக்கிறாயா என்று கூறி சீனிராஜ் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சுரேசின் தலையின் தாக்கினர். மேலும் சுரேசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சீனிராஜ், கோபால் மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த சுரேஷ், போடியை சேர்ந்த காத்தப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.