பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?


பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி? என்பது குறித்து கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

விழுப்புரம்

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை. வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் இதோ....

காரணம் என்ன?

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரகுபதி:-

பள்ளி- கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதற்கான காரணம், பெண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் பாலியல் சார்ந்த அறிவுரை சொல்லக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுவது, குடும்ப வறுமையின் காரணமாக மாணவிகள் தங்களுடைய எதிர்பார்ப்புகளை, ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முன்வரும் ஆண் நண்பர்களை நம்பி ஏமாற்றப்படுவதும், மாணவர்களுக்கு இருக்கும் ஹீரோயிசம் எனும் கதாநாயகனாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற ஒரு வக்கிரபுத்தியின் காரணமாக ஏற்படும் திடீர் நிகழ்வுகளால் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது. பெண்கள், ஆண்களுக்கு அடிமை என்கிற தவறான எண்ணங்களும்கூட இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு காரணமாக அமைகிறது. ஆபாசமான திரைப்படங்கள், செல்போன், யூ-டியூப் போன்றவைகளில் வெளிப்படையாக ஒளிபரப்பப்படும் உணர்ச்சியை தூண்டும் வசனங்கள், புகைப்படங்கள் முக்கிய காரணமாக அமைகிறது. மாணவர்கள் மற்றும் மாணவிகள்கூட தற்போது மது அருந்துகிற வழக்கத்துக்கு ஆளாகி இருப்பதும் இந்த பாலியல் குற்றங்கள் பெருகிட காரணமாகும்.

இதை தடுக்க பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது. இதனால் ஏற்படும் எதிர்கால பின்விளைவுகளை மிகத்தெளிவாக அழுத்தம் திருத்தமாக சொல்லித்தர வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள், குட் டச், பேட் டச் எது என்பதை அவசியம் சொல்லித்தர வேண்டும். பள்ளிகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற நீதி போதனை வகுப்புகளை வாரந்தோறும் ஒரு நாளாவது மாணவ- மாணவிகளுக்கு சொல்லித்தர வேண்டும். அதில் தனிமனித ஒழுக்கமும், பாலியல் சார்ந்த நல்கருத்துக்களும் போதிக்கப்பட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் மாணவ- மாணவிகளில் பாகுபாடின்றி உணர்ந்து திருந்தும் வகையில் கண்டிப்பான கடும் சட்டங்களை இயற்ற வேண்டும். அதேநேரத்தில் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மாணவ- மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே இந்த பாலியல் குற்றங்களிலிருந்து மாணவர்களையும், மாணவிகளையும் மீட்க முடியும்.

விழிப்புணர்வு தேவை

திண்டிவனத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் பிரபா கல்விமணி:-

பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 1-ம் வகுப்பு முதல் பள்ளி, கல்லூரி பட்டப்படிப்பு வரை ஆண், பெண் பாலினங்கள் ஒன்றாக படிக்கும்படி வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்கள், மாணவிகள் இடையே வக்கிரபுத்தி ஏற்படுவது தடுக்கப்படும். மாணவ- மாணவிகள் சேர்ந்து படிக்கும்போது இயல்பான நட்புடன் பழக்கம் ஏற்பட்டு ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் நிலை உருவாகும். ஒன்றிரண்டு இடங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தவறுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் மாணவ- மாணவிகள் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ளவும், வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். அப்போதுதான் பிரச்சினைகள் குறைவதற்கு வழிவகுக்கும். பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளை சந்தேக கண்ணோடு பார்ப்பது தவறாகும். அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எங்கள் காலங்களில், பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே படிப்பதற்கும், வேலைக்கும் அனுப்ப மாட்டார்கள். அப்போது பழக்கம் ஏற்படும் நபருடன் எப்படிப்பட்டவர் என்று தெரியாமலேயே தவறான முடிவு எடுத்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்வார்கள். தற்போது அந்த நிலை மாறி பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்களும் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி- கல்லூரிகளில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், அதை மறைப்பதால் குற்றங்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும். எல்லா நிறுவனங்களிலும் ஆண்கள், பெண்களுக்கு சம எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு இருக்க வேண்டும். புகார் பெட்டி வைத்து முகவரி இல்லாத புகார்களையும், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது பள்ளி- கல்லூரிகளில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் குற்றத்தை மறைத்ததால்தான் தவறுகள் அதிகமாகி வருகின்றன.

ஜாமீன் கிடைக்காத தண்டனை

மேல்மலையனூர் அருகே மானந்தல் கிராமத்தை சேர்ந்த சமூகஆர்வலர் பாலவீரன்:-

பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு வெளியில்தான் அதிகளவில் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் உட்புறம் ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கிறது. பள்ளி- கல்லூரிகளில் நடைபெற்றால் அச்சம்பவம் அதிகளவில் பரப்பப்படுகிறது. ஆனால் வெளியில் நடைபெறுவது அந்தளவிற்கு வெளிப்படுத்துவதில்லை. பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் வீட்டிலுள்ள பெற்றோர்கள், குழந்தை பருவத்திலிருந்தே தங்கள் பிள்ளைகளுக்கு அதுபற்றி சொல்லிக்கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது குழந்தைகளுக்கு பள்ளிகளில் குட் டச், பேட் டச் எது என சொல்லி கொடுக்கப்படுகிறது. அதேபோல் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு அரசு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவிகளின் தகவல்களை வெளியிடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இதனால் அந்த குழந்தையின் எதிர்காலம் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு, இதில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி தண்டனை வழங்க வேண்டும்.

மனநல ஆலோசனை

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலத்துறை முதுநிலை உதவி பேராசிரியர் டாக்டர் கதிர்:-

சிறார் நீதி சட்டம் 2015-ன் படி பள்ளி- கல்லூரி நிர்வாகங்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு மீறப்பட்டால் கல்வி நிர்வாகம், தனிநபர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பள்ளி- கல்லூரி நிர்வாகமும் குறைதீர்க்கும் புகார் பெட்டிகள் மற்றும் புகாருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவுகளை உருவாக்க வேண்டும். மாணவர் ஆலோசகர்களை நியமித்து அவர், மாணவர்களை எளிதாக அணுகும் வகையில் ரகசியத்தை பராமரிக்கும் உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும். பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிள்ளைகள் மனம்திறந்து பேசுவதற்கான சூழல் தற்போது இருப்பதில்லை. அதற்கு ஏதுவான சூழலை பெற்றோர்கள், ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். பிள்ளைகள் பேசத்தொடங்கினால்தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும். தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் உளவியலாளர்கள் அமைத்த குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறு வயது முதல் தொடுதல் தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டும். குற்றம் நிகழ்ந்தால் அதை அவமானமாக கருதும் மனநிலை தற்போதைய பெற்றோர்களிடம் உள்ளது. இது குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது. பெற்றோர்கள், பாலியல் தொடர்பான விஷயங்களை குழந்தைகளிடம் பக்குவத்துடன் பேசி புரிதலை உருவாக்க வேண்டும். தமிழக அரசின் மனம் என்ற திட்டத்தில் நமது விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் பாலியல் சம்பந்தமான குற்றங்களை தடுக்கும் விதமாக தகுந்த மனநல ஆலோசனை, மனநல மருத்துவர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு 9488406808 என்ற செல்போன் எண்ணில் அணுகி பேசலாம்.

துணிந்து புகார் கொடுங்கள்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி கூறும்போது:-

தற்போது வேலியே பயிரை மேய்ந்தது என்ற பாணியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் நடத்தும் சில ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்கின்றனர்.

இதை தடுக்க ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இந்த சட்டத்தின் கைது செய்யப்பட்டால் உங்களுடைய பணி பறிக்கப்பட்டு தண்டனை வழங்கும்போது உங்களுடைய குடும்பங்கள் பாதிக்கப்படும் என அறிவுரை வழங்கி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிக்கும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என ஒரு குழுமம் அமைத்து மாதந்தோறும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு தொடர்பான இன்னல்கள் நடக்கிறதா ? என கேட்க வேண்டும்.

பாலியல் குற்றங்கள் என்ன என்று மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்வதாக வீட்டில் மாணவிகள் கூறும்போது பிள்ளைகளின் எதிர்காலம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர் புகார் கொடுக்க வர தயங்குகிறார்கள். எனவே பெற்றோர்கள் தயங்காமல் துணிந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்றார்.


Next Story