தந்தையின் கல்லறையை தேடி மலேசியா சென்ற தென்காசி சமூக ஆர்வலர்
55 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையின் கல்லறையை தேடி தென்காசி சமூக ஆர்வலர் மலேசியா சென்றார். அங்கு புதர்மண்டி கிடந்த பகுதியில் கல்லறையை கண்டுபிடித்து அவர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
55 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையின் கல்லறையை தேடி தென்காசி சமூக ஆர்வலர் மலேசியா சென்றார். அங்கு புதர்மண்டி கிடந்த பகுதியில் கல்லறையை கண்டுபிடித்து அவர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஆர்வலர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன். சமூக ஆர்வலரான இவர், அந்த பகுதியில் ரஜினிகாந்த் ரத்ததான முகாமை தொடங்கி ஏராளமான முகாம்களை நடத்தி வருகிறார்.
இவரது தந்தை பூங்குன்றன் என்ற ராமசுந்தரம். தாயார் ராதாபாய். இவர்கள் மலேசியா நாட்டில் ஆசிரியர்களாக வேலை பார்த்தனர். கடந்த 1967-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக ராமசுந்தரம் இறந்துவிட்டார். அப்போது திருமாறன் பிறந்து 6 மாதங்களே ஆகியிருந்தது. இதனால் அவரது தாயார், கணவரின் உடலை மலேசியாவிலேயே அடக்கம் செய்து விட்டு மகனை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார். இங்கு வந்த சில ஆண்டுகளிலேயே ராதாபாயும் இறந்து விட்டார்.
மரியாதை செலுத்த விரும்பினார்
தாய்-தந்தையை இழந்த திருமாறன் சமூக பணிகளில் ஆர்வம் காட்டினார். மேலும் அனாதை ஆசிரமம் தொடங்கி ஏராளமானவர்களை பராமரித்து வருகிறார். அனாதைகளுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது என காலத்தை கடத்தி வந்தார்.
இருந்தாலும் அவர் மனதில் தந்தை பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. அறியாப்பருவத்தில் இறந்துபோன தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.
கல்லறையை கண்டுபிடித்தார்
இதையடுத்து மலேசியாவில் தனது பெற்றோர் தங்கி இருந்த பகுதியை கூகுளில் தேடி கண்டுபிடித்தார். தனது தந்தை ஆசிரியராக இருந்தபோது அவரிடம் படித்த மாணவர்கள் விவரத்தை திருமாறன் திரட்டினார். இதில் மோகனராவ், நாகப்பன் ஆகியோர் பற்றிய விவரங்கள் கிடைத்தது. அவர்கள் மூலம் தனது தந்தையின் கல்லறை மலேசியாவின் கெர்லிங் பகுதியில் இருப்பதை அறிந்து கொண்டார்.
பின்னர் திருமாறன் மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டார். 55 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது தந்தை ராமசுந்தரத்தின் கல்லறையை தேடி கடந்த 8-ந் தேதி மலேசியாவுக்கு சென்றார். அங்கு தனது தந்தையிடம் படித்த மாணவர்கள் உதவியுடன் கல்லறையை கண்டுபிடித்தார்.
கண்ணீர் விட்டார்
அங்கு ஒரு புதருக்குள் இருந்த கல்லறையில் தனது தந்தையின் பிறப்பு, இறப்பு பற்றிய விவரங்கள் இருந்ததை பார்த்து திருமாறன் கண்ணீர் விட்டார். புதர்மண்டி கிடந்த அந்த கல்லறையை சுத்தப்படுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த கல்லறை முன்பிருந்து புகைப்படம் எடுத்து கொண்டு, தந்தையின் நினைவுகளை சுமந்து கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.