தண்ணீரை தேடி ஈரோடு நகருக்குள் புகுந்த புள்ளி மான்


தண்ணீரை தேடி ஈரோடு நகருக்குள் புகுந்த புள்ளி மான்
x

புள்ளி மான்

ஈரோடு

தண்ணீரை தேடி ஈரோடு நகருக்குள் புள்ளி மான் ஒன்று புகுந்தது.

புள்ளி மான்

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு பின்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் காலிஇடம் உள்ளது. அங்கு சுமார் 10 அடி உயரத்துக்கு சீமை புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. அங்கு நேற்று காலையில் புள்ளி மான் ஓடியது. இதைப்பார்த்த பொதுமக்கள் ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு வன பாதுகாவலர் நல்லசிவம் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது 11 வயதான பெண் புள்ளிமான் ஒன்று அங்கு மேய்ந்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மானை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிடுவதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கு உதவியாக ஈரோடு தீயணைப்பு படை வீரர்களுக்கு வனத்துறையினர் அழைப்பு கொடுத்தனர்.

ஓட்டம் பிடித்தது

ஈரோடு தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுசாமி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று மானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் மான் சிக்காமல் ஓட்டம் பிடித்தது. அந்த மானை பின்தொடர்ந்து தீயணைப்பு படையினரும், வனத்துறையினரும் சென்றார்கள். அவர்களுக்கு உதவியாக பொதுமக்களும் மானை பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் யாரிடமும் மான் சிக்காமல் ஓடிச்சென்றது. சிறிது தூரத்துக்கு பிறகு மான் எங்கு சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் மானை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் ரெயிலில் அடிப்பட்டு ஒரு மான் உயிரிழந்தது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் மான்களின் நடமாட்டம் இருப்பது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோடை காலம் தொடங்கி இருப்பதால் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீரை தேடி மான்கள் வெளியேறி இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story