சிவஞானபுரத்தில் தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள அரசு நிலங்களை மீட்க கோரிக்கை
சிவஞானபுரத்தில் தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே சிவஞானபுரத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்கக் கோரி கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும்நாள்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
தனியார் ஆக்கிரமிப்பு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் தலைவர் கே.பாலையா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், சிவஞானபுரம் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளன. இந்த நிலங்களை மீட்க வருவாய் துறையினர் தலைமையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும். மேலும், இந்த நிலங்களை மீட்டு அந்த இடங்களில் ஊருக்கு தேவையான குடிநீர் தொட்டி மற்றும் நவீன விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாடுகள் தொடர் திருட்டு
விளாத்திகுளம் தாலுகா கோவில் குமரெட்டியாபுரம் கிராமத்ததை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் மாடுகள் தொடர்ந்து காணாமல் போய் வருகின்றன. இந்த மாடுகளை ஒரு கும்பல் தொடர்ந்து திருடிச் சென்று கறிக்கடையில் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக காடல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விசயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாடுகளை திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடு திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் காணாமல் போன மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாலையில் மின்கம்பம்
தூத்துக்குடி தருவைகுளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் அளித்த மனுவில், தருவைகுளம் கிராமத்தில் காமராஜர் நகர் கிழக்கு மற்றும் மணித்தெரு ஆகிய தெருக்களில் சாலைகளின் நடுவே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமில்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த மின் கம்பங்களை சாலையின் ஓரமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.