சோனகன்விளையில் அய்யா வைகுண்டர் சுவாமி கோவிலை இடிக்க எதிர்ப்பு
சோனகன்விளையில் அய்யா வைகுண்டர் சுவாமி கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொட்டும் மழையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோனகன்விளை;
திருச்செந்தூர் அருகே அய்யா வைகுண்டர் சுவாமி கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொட்டும் மழையில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யாவைகுண்டர் சுவாமி கோவில்
திருச்செந்தூர் அருகே சோனகன்விளை குளத்து கரையோரம் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்துகரையில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் அந்த கோவிலை அகற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகி நரசிம்மனிடம் தெரிவித்துள்ளனர். இந்த கோவில் ஊருக்கு சொந்தமான இடத்தில் ஊர் மக்களிடம் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது என அவர் அதிகாரிகளுக்கு பதில் அளித்தள்ளார். மேலும், இந்த கோவிலில் ஊர் பொதுமக்கள் பலர் வழிபட்டு வருவதாகவும், பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இடிக்க எதிர்ப்பு
மேலும் இந்த கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் நேற்று முன்தினம் நேரில் வந்து நாளை (அதாவது நேற்று) இந்த கோவிலை நீங்களே அகற்றிவிடுங்கள். இல்லையென்றால் நாங்கள் அகற்றுவோம் என்றும், அதற்குரிய செலவை நீங்கள் செலுத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகியிடம் தெரிவித்து சென்றுள்ளனர்.
பொதுமக்கள் திரண்டனர்
இந்தநிலையில் கோவில் இடிப்பதாக தகவல் அறிந்த திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள வள்ளிவிளை, குருந்தான்விளை, செந்தாமரைவிளை, காணியாளன்புதூர், கானம், உடன்குடி, சோனகன்விளை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று கொட்டும் மழையில் கோவில் முன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கோவிலை அகற்ற வருவதாக கூறிய பொதுப்பணித்துறையினர் நேற்று வரவில்லை. இருப்பினும் பொதுப்பணித்துறையினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பொதுமக்கள் மாலை வரை கோவில் முன்பு திரண்டிருந்தனர்.
பங்கேற்றவர்கள்
இதில் சாமிதோப்பு தலைமைபதி வாகனதாரர் தங்கமகன், பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் சுப்பையன், பாஜக மகளிரணி மாவட்ட செயலாளர் தங்கரதி, வள்ளிவிளை லிங்கத்துரை, வெற்றிவேல், பார்வதி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இச்சம்பவம் தொடர்ந்து கோவில் பகுதியில் திருச்செந்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.