சிறப்பு முகாம்களில் 60 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு


சிறப்பு முகாம்களில் 60 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 60 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 60 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்

கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் சுகாதாரத்துறை சார்பில் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆம்பூர், ஆலங்காயம், புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடந்தது. இவை தவிர 16 நடமாடும் குழுக்கள் மூலமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

60 பேருக்கு காய்ச்சல்

திருப்பத்தூரில் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் நேற்று முன்தினம் 10,451 பேருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 30 பெருக்கும், நேற்று 10,461 பெருக்கு குடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 30 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story