தாளவாடியில் தக்காளி கிலோ ரூ.100-க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள்


தாளவாடியில்  தக்காளி கிலோ ரூ.100-க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள்
x

தாளவாடியில் தக்காளி கிலோ ரூ.100-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் தக்காளி கிலோ ரூ.100-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தக்காளி சாகுபடி

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

வழக்கமாக தாளவாடி விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் தக்காளி பயிர் சாகுபடி செய்வார்கள். ஆனால் கடந்த 2 வருடங்களாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு 50 ஏக்கரில் மட்டுமே தக்காளி சாகுபடி செய்திருந்தனர்.

உச்சத்துக்கு சென்றது

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூரு, குண்டல்பேட், கொள்ளேகால் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் தக்காளி சாகுபடி அளவை குறைத்துவிட்டனர். அதனால் தேவை அதிகரித்து தக்காளி விலை உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் வரை உச்சத்துக்கு சென்றது. அதனால் இல்லத்தரசிகள் தக்காளி வாங்குவதையே குறைத்துக்கொண்டனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதற்கிடையே தாளவாடியில் கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளியை 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள், கடந்த 10 நாட்களாக கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை கொள்முதல் செய்தனர். இந்தநிலையில் நேற்று தாளவாடியில் உள்ள தோட்டங்களுக்கு சென்ற வியாபாரிகள் தக்காளி கிலோ ரூ.100-க்கு கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதுவரை தாளவாடியில் தக்காளியை வியாபாரிகள் 100 ரூபாய்க்கு கேட்டதில்லை என்று விவசாயிகள் கூறினர்.


Next Story