தமிழ்நாட்டில்மதுவை ஒழித்தால் குற்றச்சம்பவங்கள் நடக்காது;ஈரோட்டில் ஜான்பாண்டியன் பேட்டி
தமிழ்நாட்டில் மதுவை ஒழித்தால் குற்றச்சம்பவங்கள் நடக்காது என்று ஈரோட்டில் ஜான் பாண்டியன் கூறினார்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழித்தால் குற்றச்சம்பவங்கள் நடக்காது என்று ஈரோட்டில் ஜான் பாண்டியன் கூறினார்.
நடைபயணம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் அ.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மயில்துரையன் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 101 கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மக்களுடைய கோரிக்கையை ஏற்று 7 பிரிவுகளை உள்ளடக்கிய அரசாணையை மத்திய அரசு அறிவித்தது. அதுபோல் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான உத்தரவையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபயணம் நடத்தப்பட உள்ளது. நவம்பர் 19-ந் தேதி சங்கரன்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தலில் ஆதரவு
பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய கோரிக்கைகளை யார் ஏற்று கொள்கிறாா்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். மாநில அரசு பரிந்துரை செய்வதற்கு முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். 1936-ம் ஆண்டு நாங்கள் எஸ்.சி. பிரிவில் கிடையாது. 1952-ம் ஆண்டு ராஜாஜி காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது எஸ்.சி. பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டோம்.
சாதி வாரிய கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தவில்லை. அதனால்தான் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். மாநில அரசு கணக்கெடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் தொகை அடிப்படையில் எங்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசால் வழங்க முடியும். இந்த உரிமையை மீட்கும் வரை போராட்டத்தை தொடருவோம்.
மது ஒழிப்பு
தமிழ்நாட்டில் மதுவை அறவே ஒழித்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைபோல மதுவை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை குறைத்து எந்த பயனும் இல்லை. கடைகளை முழுமையாக அடைக்க வேண்டும். வருமானத்தைதான் அரசு பார்க்கிறதே தவிர, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கவனிப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், அருண் பிரின்ஸ், சண்முகசுதாகர், தமிழரசன், அமுதமுரளி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சத்யா நன்றி கூறினார்.