தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காலூன்ற விடக்கூடாது மாதர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் பேச்சு


தமிழகத்தில்  பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காலூன்ற விடக்கூடாது  மாதர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காலூன்ற விடக்கூடாது என்று மாதர் சங்க மாநில மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே கூறினார்.

கடலூர்

கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16-வது மாநில மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டின் 2-வது நாளாக பொது மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில துணை தலைவர் அமிர்தம் கொடியேற்றினார். வரவேற்புக்குழு தலைவர் ரேணுகாதேவி வரவேற்றார். மாநில தலைவர் வாலண்டினா தலைமை தாங்கி பேசினார்.

மாநாட்டை அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் கார்டுகள் ரத்து

கொரோனா நோய் தொற்று காலக்கட்டத்திலும் மாதர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டீர்கள். அந்த காலக்கட்டத்திலும் நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் உணவு தானியங்கள் வினியோகம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவு தானியங்கள் எல்லாம் பதுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே ரேஷன் கார்டு இல்லாத அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கி, உணவு பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மைக்ரோ பைனான்ஸ் போன்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற நடவடிக்கையை தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும்.

தோற்கடிக்க வேண்டும்

ஆனால் இதை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்றவை நியாயப்படுத்துகிறது. அனைத்து மதத்திலும் மத கோட்பாடுகளை காட்டி பெண்களை அடிமையாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இதில் இருந்து பெண்கள் விடுபட்ட இயக்கங்களில் ஈடுபட வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காலூன்ற விடக்கூடாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநில பொதுச்செயலாளர்கள் சுகந்தி, மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் அகில இந்திய துணை தலைவர் வாசுகி உள்பட மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் மல்லிகா நன்றி கூறினார். தொடர்ந்து மாலையில் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.


Next Story