தமிழகத்தில்வடஇந்தியர்கள் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி வருகிறார்கள்;ஈரோட்டில் சீமான் பேட்டி


தமிழகத்தில்வடஇந்தியர்கள் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி வருகிறார்கள்;ஈரோட்டில் சீமான் பேட்டி
x

தமிழகத்தில் வடஇந்தியர்கள் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி வருகிறார்கள் என்று ஈரோட்டில் சீமான் கூறினார்.

ஈரோடு

தமிழகத்தில் வடஇந்தியர்கள் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி வருகிறார்கள் என்று ஈரோட்டில் சீமான் கூறினார்.

வேட்பாளர் அறிமுகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு என்.ஜி.ஜி.ஓ.காலனியில் நடந்தது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மகளிர் பாசறை துணைச்செயலாளர் மேனகாவை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் மரப்பாலம் பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் மாற்றத்தை எதிர்நோக்கும் மக்களுக்காகவே நாங்கள் போட்டியிடுகிறோம். நாங்கள் மக்களை நேரில் பார்த்து பிரசாரம் செய்து வெற்றியை பெற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மற்ற கட்சிகள் வீதிகளில் அமர்ந்து பணம் கொடுத்து வாக்குகளை சேகரிக்க முயல்வார்கள்.

நிர்ணயிக்கும் சக்தி

கடந்த முறை 234 தொகுதிகளில் ஒன்றாகத்தான் இந்த தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டோம். ஆனால் இந்தமுறை 12 நாட்களுக்கு மேல் நான் இங்கு தங்கியிருந்து தொடர் பிரசாரம் மேற்கொள்வேன்.

இங்கு கம்பி கட்டும் வேலை முதல் விவசாய பணிகளை செய்ய நம் மக்கள் முன்வருவதில்லை. இந்த பணிகளை வட இந்திய மக்கள் தான் செய்கின்றனர். புலம்பெயர்ந்த மக்கள் இங்கேயே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கிறார்கள். இதுமிகவும் ஆபத்தானது. தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி வருகிறார்கள். அவர்கள் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் பா.ஜ.க.வுக்கு தான் வாக்களிப்பார்கள்.

நல்ல ஆட்சி

யாருடைய வாக்குகளையும் பிரிக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் வெற்றிபெற வேண்டும். மக்களுக்கு நல்ல ஆட்சி தர வேண்டும். காமராஜர், கக்கன் போன்ற நல்லவர்களின் ஆட்சியை எங்களால் தர முடியும் என்ற நோக்கத்தில் தான் மக்களை சந்திக்கிறோம். இந்த தொகுதியில் நாங்கள் வெற்றிபெற்றால் மாற்றத்துக்கான விதை இங்கிருந்து தொடங்குவதாக தான் எடுத்து கொள்ள வேண்டும். நாங்கள் வந்தால் கல்வியையும், மருத்துவத்தை உலகத்தரத்துக்கு மாற்றுவோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொருளாளர் ராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீச பாண்டியன், இடும்பாவனம் கார்த்தி, ராஜா அம்மையப்பன், கிருஷ்ணகுமார், கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், திருப்பூர் மண்டல செயலாளர் வான்மதி த.வேலுச்சாமி, மாநில ஆளுமைக்குழு உறுப்பினர் ந.வெங்கடாசலபதி, திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா ஜேழ.மனோகர், ஈரோடு மண்டல செயலாளர் சே.நவநீதன், மாவட்ட செயலாளர்கள் மோ.அருண்குமார் (ஈரோடு கிழக்கு), செ.தாண்டவமூர்த்தி (ஈரோடு மேற்கு), பெ.நா.தினேஷ் (ஈரோடு தெற்கு), ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி, கிழக்கு மாவட்ட பொருளாளர் நா.மணிகண்டன், ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story