தஞ்சையில், 2-வது கட்டமாக பேரிடர் கால பயிற்சி


தஞ்சையில், 2-வது கட்டமாக பேரிடர் கால பயிற்சி
x

தஞ்சையில், 2-வது கட்டமாக பேரிடர் கால பயிற்சி

தஞ்சாவூர்

தஞ்சையில் பேரிடர் கால 2-வது கட்ட பயிற்சியை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

பேரிடர் கால பயிற்சி

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் இந்தியாவில் புயல், வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் பாதிக்கப்படும் 350 மாவட்டங்களில் 1 லட்சம் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்களை உருவாக்கிட திட்டம் வகுக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மூலமாக 16 கடலோர மாவட்டங்களில் 5 ஆயிரத்து 500 பேரிடர் கால நண்பர்களை உருவாக்கிட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் இதற்கான பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

2-வது கட்ட பயிற்சி தொடக்கம்

தஞ்சை மாவட்டத்தில் 200 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 2-வது கட்டமாக பேரிடர் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் 12 நாட்கள் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பேரிடர் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். இந்த பயிற்சியை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் பொருளாளர் முத்துக்குமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பயோகேர் முத்துக்குமார், ஜான் ஆண்ட்ரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

30 பேர் பங்கேற்பு

இதில் தன்னார்வலர்கள் 30 பேருக்கு பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அவர்களுக்கு பயிற்சி தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டன. பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு காப்பது, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்பது என்பது உள்ளிட்ட பல்வேறு பேரிடர் கால பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.


Next Story