தஞ்சையில், கார்த்திகை முதல் நாளில் மீன்மார்க்கெட் வெறிச்சோடியது


தஞ்சையில், கார்த்திகை முதல் நாளில் மீன்மார்க்கெட் வெறிச்சோடியது
x

தஞ்சையில், கார்த்திகை முதல் நாளில் மீன்மார்க்கெட் வெறிச்சோடியது

தஞ்சாவூர்

கார்த்திகை முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியதையடுத்து தஞ்சை மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. விலையும் குறைவாக இருந்தாலும் வாங்க ஆளில்லாத நிலை காணப்பட்டது.

கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் தொடங்கியதுமே பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருப்பார்கள். அந்த மாதங்களில் அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பார்கள். மேலும் அய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். இதனால் அவர்களின் குடும்பத்தினரும் அசைவ உணவினை தவிர்த்து விரதம் மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி கார்த்திகை மாதம் நேற்று தொடங்கியதையடுத்து அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் இறைச்சி கடைகள் காற்று வாங்கின. தஞ்சையில் மீன்மார்க்கெட்டும் வெறிச்சோடி காணப்பட்டது. தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

வெறிச்சோடியது

இந்த மீன்மார்க்கெட் நேற்று வழக்கம் போல செயல்பட்டது. ஆனால் மீன் வாங்குவதற்கு தான் ஆட்கள் வரவில்லை. ஒன்றிரண்டு பேர் மற்றும் ஓட்டல், உணவகங்களுக்கு மீன் வாங்க வந்தவர்கள் தான் வாங்கி சென்றனர். இதனால் மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று மீன்மார்க்கெட்டில் மீன்கள் விலையும் குறைந்து காணப்பட்டது. வழக்கமாக விற்கும் விலையை விட நேற்று கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை விலை குறைவாக காணப்பட்டது. இருப்பினும் விற்பனை இல்லை. இதனால் வியாபாரிகளும் மீன்களை விற்பனைக்காக குவித்து வைத்து காத்துக்கிடந்தனர்.

மீன்கள் விலை விவரம்

தஞ்சை மீன்மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட மீன்கள் விலை (கிலோ கணக்கில்) வருமாறு:-

உயிர் கெண்டை ரூ.180, குளிர்சாதன பெட்டியில்வைக்கப்பட்ட கெண்டை மீன் ரூ.120. வஞ்சிரம் ரூ.400 முதல் ரூ.500 வரை. சங்கரா ரூ.100 முதல் ரூ.180 வரை. அயிலை ரூ.100. விரால் ரூ.300 முதல் ரூ.400 வரை. இறால் ரூ.220 முதல் ரூ.380 வரை. நண்டு ரூ.250 முதல் ரூ.350 வரை. மத்தி மீன் ரூ.100.

ஆட்கள் வரவில்லை

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், கார்த்திகை மாதம் தொடங்கினாலே மீன் விற்பனை குறைந்து விடும். தற்போது அய்யப்ப பக்தர்கள் விரதம் காரணமாக மீன் விற்பனை மந்தமாக காணப்பட்டது. வழக்கமாக விற்கும் விலையை விட குறைவாக விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆட்கள் வரவில்லை. இந்த மாதம் முழுவதும் இதே நிலை தான் காணப்படும்"என்றனர்.


Next Story