தஞ்சையில்,பகலில் அக்னி நட்சத்திரம் போல் சுட்டெரித்த வெயில்
தஞ்சையில்,பகலில் அக்னி நட்சத்திரம் போல் சுட்டெரித்த வெயில்
தஞ்சையில் பகலில் அக்னி நட்சத்திரம் போல் 102 டிகிரி வரை வெயில் ெகாளுத்தியது. நள்ளிரவில் பரவலாக மழைபெய்து குளிர்ந்த காற்று வீசியது.
அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திரம் காலங்களில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். தஞ்சையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கோடை காலங்களை ஒப்பிடுகையில் சற்று மிதமாக தான் வெயில் இருக்கும். அதை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
பருவகால மாற்றத்தின் காரணமாக தஞ்சையில் அடிக்கடி மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக இருந்து வருகிறது. மிதமான வெயில் அடிக்கவேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் சுட்டெரித்து வருவது மக்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. தஞ்சையில் கடந்த 2 நாட்களாக 98 மற்றும் 99 டிகிரி வரை வெயில்கொளுத்தியது.
நெடுஞ்சாலையில் அனல் காற்று
நேற்று காலை 9 மணி முதலே கொளுத்த தொடங்கிய வெயில் பகல் 1 மணிக்கு 102 டிகிரியை எட்டியது. இதன் காரணமாக தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசியது. மேலும் சாலைகளில் கோடை காலத்தை போல கானல் நீர் தோன்றியது. வெயிலின் தாக்கம் காரணமாக வாகனஓட்டிகள் அவதியடைந்தனர்.
இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாலையில் நடந்து சென்றவர்களும் குடைகளை பிடித்துக்கொண்டும், முகத்தில் துணியை மூடிக்கொண்டும் சென்று வந்தனர்.
இளநீர் கடைகளில் விற்பனை
பொதுமக்கள் சிலர் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் தெரிவித்தனர். அதேபோல வெயிலின் தாக்கத்தை குறைக்க நீர் நிலைகளை நாடி சென்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாலை நேரத்திலும் நீர் நிலைகளை விட்டு வெளியே வர மனம் இல்லாமல் உற்சாக குளியல் போட்டனர்.
வெயிலின் சூட்டை தணிக்க சாலை ஓரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த இளநீர் கடைகளில் விற்பனை களைகட்டியது. மேலும், குளிர்பான கடைகளிலும், பழச்சாறு, குளிர்பானங்கள் அருந்த மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைவாக காணப்படும் இந்த காலத்தில் வெயில் வாட்டி வதைப்பது மக்களை மிகுந்த அவதிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் பரவலாக மழைபெய்து குளிர்ந்த காற்று வீசியது.